

புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
சாட்சிகள் பாதுகாக்கப்படுவதையும், அப்பகுதியில் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறும், 24x7 கண்காணிப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துமாறும் மேற்கு வங்காள மாநில அரசுக்கு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7ந்தேதிக்குள் தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி பா.ஜ.க. எம்.பி. ரூபா கங்குலி நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் பேசும்போது, மேற்கு வங்காளத்தில் பெருமளவில் படுகொலைகள் நடைபெறுகின்றன. மக்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடுகிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு செயலிழந்து காணப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் மக்களால் பேச கூட முடியவில்லை. கொலைகாரர்களை அரசு பாதுகாக்கிறது. தேர்தலில் வெற்றியடைந்த பின்பு, மக்களை அரசு கொல்வது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
நாம் மனிதர்கள். கல்நெஞ்ச அரசியலை நாம் செய்ய கூடாது என்று கூறிய கங்குலி, மனமுடைந்து அவையிலேயே கண்ணீர் விட்டார். அவரை பின்னால் இருந்த மற்றொரு பெண் உறுப்பினர் ஆற்றுப்படுத்த முயல்கிறார். எனினும், கங்குலி கண்ணீரை துடைத்தப்படியே தொடர்ந்து பேசினார்.