

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 59 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். மேலும் 80 லட்சம் பேருக்கு குடியுரிமைக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேற்கு வங்காள அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களால் அதிருப்தி அடைந்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் கடந்த 20-ந் தேதி பல உத்தரவுகளை பிறப்பித்தது.
அந்த உத்தரவில், “கொல்கத்தா ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை பணியில் அமர்த்த வேண்டும். வரும் 28-ந் தேதிக்குள் மாநிலத்தில் வாக்காளர்களின் வரைவு பட்டியலை வெளியிடலாம். அதே நேரத்தில் தேர்தல் குழு பின்னர் துணைப் பட்டியலையும் வெளியிடலாம்” என்று கூறியிருந்தது.இந்நிலையில் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 80 லட்சம் பேரின் ஆட்சேபனைகளை பரிசீலிக்க 80 நாட்கள் தேவை என்றும், இதற்காக 250 மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொண்டது.நேரக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, இந்தப் பணிக்காக சிவில் நீதிபதிகளை நியமிக்கவும், அண்டை மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த நீதித்துறை அதிகாரிகளை நியமிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.