

முர்ஷிதாபாத்,
மேற்கு வங்காள மாநிலத்தில் 16 வயது சிறுவனான இக்பால், எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறான். உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்பே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் சிறுவன் இக்பால் (வயது 16). இந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள மர்ம நோய் பாதிப்பால் கடந்த ஒரு மாதமாக, எப்போதும் தனது ஊரில் உள்ள குளத்தின் தண்ணீரிலேயே கழுத்து வரை மூழ்கியவாறு இருந்து வருகிறார்.
உடல் பருமனான அவருக்கு தண்ணீரை விட்டு வெளியே வந்தால், உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தினர் அழைத்தாலும் தண்ணீரை விட்டு வெளியே வர சிறுவன் மறுக்கிறார்.
ஏற்கனவே, சிறுவன் இக்பாலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவருக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து டாக்டர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக, பெரும்பாலான நேரங்களில் தண்ணீருக்குள்ளேயே சிறுவன் இக்பால் இருந்து வருவதால், தோலில் பிரச்சினையும், பூஞ்சை தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, சிறுவன் இக்பால் வசிக்கும் ஊர் பொதுமக்களுக்கும், உரிய மருத்துவ சிகிச்சையை விரைவில் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.