அண்ணாமலை பேசியது சரியல்ல; ஏக்நாத் ஷிண்டே எதிர்ப்பு

அண்ணாமலை கூறியது சரியல்ல. அது தவறு. அவர் அப்படி அந்த விதத்தில் பேசியிருக்க கூடாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
மும்பை,
தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் மும்பையில் மாநகராட்சி தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் "மும்பை, மராட்டிய நகரம் அல்ல. சர்வதேச நகரம்" என கூறினார். அவரின் பேச்சுக்கு உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மும்பை நகரை மராட்டியத்தில் இருந்து பிரிக்க பா.ஜனதா சதி செய்வதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அண்ணாமலை பேச்சை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.
அதேவேளையில் மும்பை நகரை பெருமைப்படுத்தவே சர்வதேச நகரம் என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக மும்பையை சேர்ந்த பா.ஜனதா தமிழ் எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்து இருந்தார்.இந்தநிலையில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவரும், துணை முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
அண்ணாமலை கூறியது சரியல்ல. அது தவறு. அவர் அப்படி அந்த விதத்தில் பேசியிருக்க கூடாது. நான் இதை பா.ஜனதாவிடமும் தெளிவுப்படுத்திவிட்டேன். மராட்டியத்தில் இருந்து மும்பையை யாராலும் பிரிக்க முடியாது. யாருக்கும் அந்த தைரியம் இல்லை. ஒரு இடத்தில் கழற்றி மற்றொரு இடத்தில் பொருத்த மும்பை ஒன்றும் ரெயில் பெட்டி இல்லை. அதேவேளையில் தனிப்பட்ட நபரின் கருத்தை பா.ஜனதாவின் நிலைப்பாடாக பார்க்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.






