

புதுடெல்லி,
தொகுதி மறுவரையறை மசோதா - 2026:_
இந்த மசோதா நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் இடங்களை மறுசீரமைப்பதற்கான ஆணையத்தை அமைக்க வழிவகை செய்கிறது. அதன் நோக்கம் என்பது 1971 மற்றும் 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ள தற்போதைய தொகுதி ஒதுக்கீட்டை, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் மறுசீரமைப்பது ஆகும்.
மத்திய அரசால் அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இருப்பார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத் தலைமை அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இது தவிர ஒவ்வொரு மாநிலத்திற்கும் 5 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் என 10 பேர் ஆணையத்திற்கு உதவ நியமிக்கப்படுவார்கள்.
ஆனால் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தல் மற்றும் அந்த இடங்களை சுழற்சி முறையில் மாற்றுவதை இந்த ஆணையம் உறுதி செய்யும். ஆணையத்தின் உத்தரவுகள் அரசிதழில் வெளியிடப்பட்டதும் சட்ட அந்தஸ்து பெறும். இதனை எந்த கோர்ட்டும் கேள்வி கேட்க முடியாது. தொகுதிகள் புவியியல் ரீதியாக நெருக்கமாகவும், நிர்வாக எல்லைகள் மற்றும் பொது மக்களின் வசதியை கருத்தில் கொண்டும் பிரிக்கப்பட வேண்டும்.
131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா:-
இந்த மசோதா நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் வழிவகை செய்கிறது. இதன் மூலம் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-ல் இருந்து அதிகபட்சமாக 850 ஆக உயர்த்தப்படும். இதில் மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்படும்.
மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி சட்டப்பேரவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கான ஒதுக்கீட்டுக்கும் நடைமுறைப்படுத்தப்படும். பெண்களுக்கான இந்த இடஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
பின்னர் நாடாளுமன்றம் தேவைப்பட்டால் அதனை நீட்டிக்கலாம். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.
யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா:-
இந்த மசோதா புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3-லிருந்து 5 ஆக உயர்த்தப்படும். புதுச்சேரி மற்றும் டெல்லி சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அங்கும் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு விதிகள் செயல்படுத்தப்படும். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும்போது. அங்குள்ள தொகுதிகளைத் தேர்தல் ஆணையமே வரையறை செய்யும். யூனியன் பிரதேசங்களின் தொகுதிகளைப் பிரிக்கும் பொறுப்பு தொகுதி மறுவரையறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.