

தியான்ஜின்,
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானம் மூலம் அங்கிருந்து சீனா புறப்பட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றார். தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதம், உலகளாவிய பிரச்சினைகள், இந்தியா- சீனா எல்லை பிரச்சினை, அமெரிக்கா வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பேச்சுவார்த்தைக்கு பின் இருதலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் தங்களின் பேச்சுவார்த்தைகளில், பெரும்பாலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினர். இந்தியா-சீனா எல்லை பிரச்சினைக்கு நியாயமான, மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி செயல்பட ஒப்புக்கொண்டனர்.
உலகளாவிய வர்த்தகத்தை உறுதிப்படுத்த இரு நாடுகளின் பங்கை அங்கீகரித்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தனர். உலக வர்த்தகத்தை நிலைநிறுத்துவதில் இரு நாடுகளின் பங்கை மோடியும், ஜின்பிங்கும் அங்கீகரித்தனர். இரு தலைவர்களும் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் நியாயமான வர்த்தகம் போன்ற பலதரப்பு தளங்களில் சவால்கள் குறித்து பொதுவான நிலையை விரிவு படுத்துவது அவசியம் என்று கருதினர்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசா நேரடி விமானங்கள் மற்றும் விசா வசதி மூலம் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டனர்.அடுத்த ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மோடி அழைப்பு விடுத்ததற்கு ஜின்பிங் நன்றி கூறியதுடன் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்துக்கு சீனாவின் ஆதரவையும் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.