

புதுடெல்லி,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு நடுவே, கடந்த மாத இறுதியில் ஈரான் கடற்படையை சேர்ந்த ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா, ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன், ஐ.ஆர்.ஐ.எஸ்.புஷேர் ஆகிய 3 போர் கப்பல்கள் கடந்த மாதம் 18 முதல் 25-ந்தேதி வரை வங்காள விரிகுடாவில் நடைபெற்ற கடற்படை கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்திருந்தன.
அந்த கப்பல்கள் பயிற்சியை நிறைவு செய்துவிட்டு இந்த மாத தொடக்கத்தில் ஈரான் திரும்பியபோது, ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா கப்பல் முதலாவதாக புறப்பட்டு சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்தது. அந்த கப்பல் இலங்கையின் தெற்கு முனையில் உள்ள கெலி நகரில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் தாக்கி அழிக்கப்பட்டது.
அந்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சுமார் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 80 முதல் 87 பேர் உயிரற்ற நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும், சுமார் 60 பேர் மாயமானதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்தது. இந்திய பெருங்கடலில் சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்திருக்கும் டியாகோ கார்சியா என்ற அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஈரானின் மற்றொரு கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த பிப்ரவரி 8-ந்தேதி இந்திய கடல் எல்லைக்குள் மீண்டும் நுழைவதற்கு அனுமதி கோரியது. அந்த கோரிக்கையை ஏற்று மார்ச் 1-ந்தேதி ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் கப்பலை கொச்சி துறைமுகத்திற்குள் நுழைய இந்திய கடற்படை அனுமதி வழங்கியது. அந்த கப்பல் மார்ச் 4-ந்தேதி கொச்சி வந்து சேர்ந்தது. அதில் மொத்தம் 183 மாலுமிகள் இருந்தனர்.
அதே போல், ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர் கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த நிலையில், இன்ஜின் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைய அந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த கப்பலில் மொத்தம் 204 மாலுமிகள் இருந்தனர்.
இந்த நிலையில், இந்தியாவிற்கு வந்துவிட்டு நாடு திரும்பும் வழியில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இருப்பினும் மத்திய அரசு இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“நாங்கள் சர்வதேச சட்டங்களை மதிக்கிறோம். இந்திய கடல் எல்லைக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஈரானிய கப்பலிடம் இருந்து உதவி கோரி அழைப்பு வந்தது. அவர்களின் கப்பலில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். எனவே, மார்ச் 1-ந்தேதி அவர்களை கொச்சி துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கினோம்.
அதே போல் மேலும் 2 ஈரானிய கப்பல்கள் இருந்தன. அந்த கப்பல்கள் இந்தியாவிற்கு வந்தபோதும், இந்தியாவை விட்டு அவர்கள் கிளம்பியபோதும் சூழ்நிலைகள் முற்றிலும் மாறியிருந்தன. அவர்கள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்தியாவிற்கு அருகில் இருந்த கப்பல், இந்தியாவிற்குள் நுழைய அனுமதி கேட்டபோது, நெறிமுறைகளின் அடிப்படையில் நாம் அனுமதி வழங்கினோம். அதே போல், இலங்கைக்கு அருகில் இருந்த மற்றொரு கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தது. ஆனால் 3-வது கப்பலின் நிலை துரதிருஷ்டவசமானது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.