

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 152 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதை முன்னிட்டு இந்த தொகுதிகளில் நடந்த அனல் பறந்த பிரசாரம் கடந்த 21-ந் தேதி மாலையுடன் ஓய்ந்தது. அத்துடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். இதனால் முதல்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகள் அனைத்திலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இதனால் பிற்பகல் 3 மணியளவிலேயே 78 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 92.72 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேற்கு வங்காளத்தில் நடந்த இந்த முதல்கட்ட வாக்குப்பதிவு பெரும்ப லும் அமைதியாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக தக்சின் தினாஜ்பூர் மாவட்டத்தின் குமர்கஞ்ச் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றை பார்வையிட சென்ற பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து சர்க்காரை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர்.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்தான் தன்னை தாக்கியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் யாரும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். இதைப்போல அசன்சோல் தக்சின் தொகுதி பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டன.
மேலும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நவோடாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஜனதா உன்னாயன் கட்சித்தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல் வீச்சு உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டதால் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிர்பும் மாவட்டத்தின் லாபூர் மற்றும் மால்டாவின் சஞ்சலில் பா.ஜ.க. வேட்பாளர்களின் முகவர்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு உருவானது.
கூச்பெகர் மாவட்டத்தின் வாக்குச்சாவடி அருகே சாலையை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி மறித்தனர். அங்கும் பா.ஜ.க. மற்றும் ஆளும் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இவ்வாறு தேர்தல் நடந்த பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான புகார்கள் வந்தன. அந்தவகையில் 12 மணிக்குள்ளாகவே சுமார் 500 புகார்கள் வந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அவற்றின் புகாரை ஆளுங்கட்சி மறுத்துள்ளதுடன், தேர்தல் அமைதியாக நடந்ததாகவும் கூறியுள்ளது. பின்னர் மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதல்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக சுமார் 2.50 லட்சம் துணை ராணுவப்படையினர், மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.