ஒரே பாலின தம்பதியரின் திருமணத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - டெல்லி ஐகோர்ட்டு கேள்வி

2 ஒரே பாலின தம்பதியரின் விசித்திரமான வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஒரே பாலின தம்பதியரின் திருமணத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - டெல்லி ஐகோர்ட்டு கேள்வி
Published on

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.எஸ்.எண்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அமர்வு முன்பாக 2 விசித்திர வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.

முறையே 47 மற்றும் 36 வயதான ஒரே பாலின (பெண்) ஜோடி, தாங்கள் இணைந்து வாழ்ந்தாலும் முறைப்படி சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொண்டு வாழ அனுமதிக்க வேண்டும் என்று ஒரு வழக்கை தொடுத்துள்ளனர்.

இன்னொரு வழக்கில், அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்ட மற்றொரு ஒரே பாலின (ஆண்) ஜோடி, இந்தியாவில் தங்கள் திருமணத்தை வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, இவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். நியூயார்க் நகர இந்திய துணைத்தூதருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

விசாரணையின்போது நீதிபதிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

இந்த வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக எந்த சந்தேகங்களும் எழவில்லை. ஆனால், வழக்கமான சட்டங்கள் திருமணங்களை அங்கீகரிக்கின்றன. ஆனால் அவை ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கவில்லை.

சிறப்பு திருமண சட்டமோ (எஸ்.எம்.ஏ.), வெளிநாட்டு திருமண சட்டமோ (எப்.எம்.ஏ.) திருமணத்தை வரையறை செய்யவில்லை. எல்லோருமே வழக்கமான சட்டங்கள்படிதான் திருமணம் என்றால் என்னவென்று விளக்குகிறார்கள்.

வழக்கமான சட்டங்கள், ஒரே பாலின திருமணங்களை அங்கீகரித்து விட்டால், அதை சிறப்பு திருமண சட்டமும், வெளிநாட்டு திருமண சட்டமும் பின்பற்றலாம்.

இந்த வழக்குதாரர்கள், திருமணத்துக்கான வரையறையை எதிர்க்க விரும்பி, தங்கள் மனுக்களில் திருத்தம் செய்ய விரும்பினால் பிற்காலத்தில் அதை செய்வதை விட இப்போதே செய்து விடலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

வழக்குதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேனகா குருசாமி, வழக்குதாரர்கள் வழக்கமான அல்லது மத சட்டங்களின்கீழ் நிவாரணம் தேடவில்லை, அவர்கள் சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டம் ஆகிய சிவில் சட்டங்களின்கீழ்தான் நிவாரணம் தேடுகிறார்கள்; இவைதான் எல்லாவிதமான தம்பதியருக்கும் பொருத்தமானவை என குறிப்பிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜ்குமார் யாதவ், சனாதன தர்மத்தின் 5 ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றில் இதுபோன்ற நிலை இப்போதுதான் முதல்முறையாக எதிர்கொள்ளப்படுவதாக கூறினார்.

அடுத்த கட்ட விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதிக்கு ஒத்திபோடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com