

ஜம்மு,
காஷ்மீரில் முதல்-மந்திரியாக இருந்த மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஜூன் மாதம் பா.ஜனதா திரும்ப பெற்றது. எனவே அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஆனால் அங்கு புதிய அரசை அமைப்பதற்கு கடந்த சில நாட்களாக பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டது. 2 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மக்கள் மாநாடு கட்சியுடன் சேர்ந்து இந்த நடவடிக்கைகளில் அந்த கட்சியினர் ஈடுபட்டனர்.
அதேநேரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் மெகபூபா முப்தியும் இறங்கினார். இந்த கூட்டணியை ஆதரிக்க தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லாவும் முன்வந்தார்.
இதைத்தொடர்ந்து காஷ்மீரில் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் சத்யபால் மாலிக்கிற்கு மெகபூபா நேற்று முன்தினம் மாலையில் கடிதம் அனுப்பினார். இதைப்போல பா.ஜனதா ஆதரவு பெற்ற மக்கள் மாநாடு கட்சியும் உரிமை கோரியது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் இரவில் காஷ்மீர் சட்டசபையை திடீரென கலைத்து கவர்னர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். இது அனைத்து கட்சிகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்த கட்சிகள், மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நடந்திருப்பதாக குற்றம் சாட்டின.
ஆனால் மாநில நலனுக்காகவே சட்டசபை கலைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் ஒவ்வொரு கட்சியும் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கடந்த 15 நாட்களாக எனக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தன. தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மிரட்டப்படுவதாக மெகபூபா முப்தி கூட புகார் கூறினார்.
இந்த நடவடிக்கைகளை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே மாநிலத்தின் நலனுக்காக, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு சட்டசபையை கலைத்தேன். மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைவதையே நான் விரும்புகிறேன்.
மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமைகோரி பேக்ஸ் மூலம் 21-ந் தேதி (நேற்று முன்தினம்) அனுப்பிய கடிதத்தை கவர்னர் மாளிகையில் யாரும் பெற்றுக்கொள்ளவில்லை என மெகபூபா முப்தி கூறியுள்ளார். ஆனால் அன்றைய தினம் மிலாது நபி என்பதால் கவர்னர் மாளிகைக்கு விடுமுறை ஆகும்.
எனவே விடுமுறை தினத்தில் யாரும் பேக்ஸ் எந்திரத்துக்கு அருகில் இருக்கமாட்டார்கள். இது மெகபூபா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோருக்கும் தெரியும். ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருந்தால், ஒருநாள் முன்னதாகவே அவர்கள் என்னை அணுகியிருக்க முடியும்.
இவ்வாறு கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.
மாநிலத்தில் குதிரை பேரத்தில் கட்சிகள் ஈடுபட்டதாக கவர்னர் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரின் நிலைத்தன்மை காப்பதற்காகவே மக்கள் ஜனநாயக கட்சியை ஆதரிக்க தேசிய மாநாடு கட்சி முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானின் அறிவுரைப்படியே தனது கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததாக பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு தனது டுவிட்டர் தளத்தில் ராம் மாதவ் பதிலளிக்கையில், உங்கள் (உமர் அப்துல்லா) நாட்டுப்பற்று குறித்து ஒருபோதும் நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் காதல்தான் பல்வேறு சந்தேகங்களையும், அரசியல் விமர்சனங்களையும் எழுப்பி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே காஷ்மீர் சட்டசபை கலைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், இது ஜனநாயகத்துக்கு எதிரான அணுகுமுறை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் காஷ்மீர் சட்டசபை கலைக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி பின்னர் தெரிவித்தார்.