கொரோனா பரவுவதை தடுக்க இரவு ஊரடங்கால் என்ன பயன்? குமாரசாமி கேள்வி

கொரோனா பரவுவதை தடுக்க இரவு நேர ஊரடங்கால் என்ன பயன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா பரவுவதை தடுக்க இரவு ஊரடங்கால் என்ன பயன்? குமாரசாமி கேள்வி
Published on

ராமநகர்,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கால் என்ன பயன்?. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா?. கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பிற தேர்தல் அவசியம் நடத்த வேண்டுமா?.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகி இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் அறிக்கையின்படி பெங்களூருவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

இந்த நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பஸ் போக்குவரத்து முடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை இப்போது நிறைவேற்ற முடியாவிட்டால் காலஅவகாசம் கொடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. போக்குவரத்து ஊழியர்கள் மீதான தனது இறுக்கத்தை அரசு குறைக்க வேண்டும். அரசு பல்வேறு தரப்பினருக்கு பஸ் பாஸ் வழங்கியுள்ளது. அதை ஈடுகட்டுவதற்கான தொகையை அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. அதனால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.

எங்கள் கட்சியை விட்டு செல்பவர்கள், தங்களுக்கு என்ன அநீதி ஏற்பட்டது என்பது குறித்து கூற வேண்டும். அவர்கள் குறித்து மக்களே முடிவு செய்ய வேண்டும். எங்கள் கட்சியில் குழப்பங்கள் இருந்தால் அதை சரிசெய்து கொள்வோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com