சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன வழி? - மத்திய அரசு அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன வழிகள் என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன வழி? - மத்திய அரசு அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் கோரிக்கை தொடர்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த மாதம் 20-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும், ஆனால் முக்கியமான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேஸ் புக், வாட்ஸ் அப் சமூக வலைத்தள நிறுவனங்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோர் ஆஜரானார்கள். மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஆஜரானார் கள்.

சமூக வலைத்தளங்களை நெறிப்படுத்துவது குறித்து பல தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெற்று வருவதாகவும், அரசு இது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் வாட்ஸ் அப் செயலியில் பதிவுகளை உளவு அறிவது தொடர்பான பிரச்சினையை சமாளிக்க உதவுவதற்குதான் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டது.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் தரப்பில் வாட்ஸ் அப் செயலிகளில் இருமுனைகளிலும் அந்தரங்கத் தன்மையை பாதுகாக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி வருவது மிகவும் ஆபத்தாக மாறி வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையத்தில் நடைபெறும் குற்றங்களை கண்டுபிடிக்கவும் தடுத்து நிறுத்தவும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லை என்று நாம் கூறமுடியாது.

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் அதற்கான தொழில்நுட்பம் இருக்கும் போது அந்த குற்றங்களை கண்டறியவும் குற்றம் இழைப்பவர்களை கண்டறியவும் தேவையான தொழில்நுட்பம் நம்மிடமும் உள்ளது. அரசிடம் இது தொடர்பான தீர்வுகள் இருந்தாலும் இந்த குற்றத்துக்கு இரையாகும் தனி மனிதனுக்கு கிடைக்கும் தீர்வு என்ன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இணையத்தில் குற்றம் இழைப்பவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. ஸ்மார்ட் போன்களை விட்டொழித்து சாதாரண போன்களை பயன்படுத்துவது பற்றி நான் தீவிரமாக யோசித்து வருகிறேன் என்று நீதிபதி தீபக் குப்தா கூறினார்.

இதற்கு மூத்த வக்கீல் கபில் சிபல், இது சரியான முடிவாக இருக்கும் என்றார். தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எங்களில் சிலர் ஏற்கனவே அப்படி மாறி விட்டோம் என்று கூறினார்.

தொடர்ந்து நீதிபதிகள், சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த கோர்ட்டுகள் முயற்சிப்பதை விட அரசு சரியான கொள்கை முடிவுகளை எடுக்கலாம். அரசாங்கம் இது தொடர்பாக கொள்கை முடிவுகளை தீர்மானித்த பிறகு அந்த கொள்கை முடிவுகளின் சட்டரீதியான தன்மை பற்றி கோர்ட்டு முடிவெடுக்கலாம். அதே நேரத்தில் தனிநபர் அந்தரங்க உரிமை பற்றி அரசாங்கம் நெறிப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மத்திய அரசு 3 வாரங்களில் அறிக்கை (பிரமாண பத்திரம்) தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com