பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

2002 -ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

எனினும், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது. 2022 ஆகஸ்ட் 15ல் அவர்களை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது.

தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்குள் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஜனவரி 21 ஆம் தேதி இரவு சரணடைந்தனர். இதற்கிடையே, பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ரமேஷ் ரூபாபாய் சந்தனா, ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த சூழலில், ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகியோர் தங்களை விடுவிக்கக்கோரிய மனு மீது முடிவெடுக்கும் வரை, தங்களை இடைக்கால ஜாமினில் விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த மனு எவ்வாறு விசாரணைக்கு உகந்தது என கூற முடியும்? இதில் எங்கு அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?" என கேள்வி எழுப்பினர். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com