

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து ஐகோர்ட் மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். தொல்லியல் துறையினர் அனுமதியுடன் கோயில் நிர்வாகம் தரப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம், தமிழக அரசு, தர்கா நிர்வாகம் தரப்பிலும், தீபம் ஏற்ற பொதுமக்களை அனுமதிக்க மறுத்த ஷரத்தை எதிர்த்து ராம ரவிக்குமார் என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் கூறப்பட்டதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது பார்ப்பதற்கு தீபத்தூண் போலத் தோன்றினாலும், உண்மையில் அது தீபத்தூண் அல்ல; ஒரு நில அளவைக் கல் ஆகும்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளில் நில அளவைப் பணிகளுக்காக இதுபோன்ற தூண்களைப் பயன்படுத்தினர் அவற்றில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள இந்தக் கல். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்திலும் கூட இதே போன்ற நில அளவைக் கல்லைப் பார்க்க முடியும்
மேலும், குறிப்பிட்ட அந்தத் தூண் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் இடம் தர்காவுக்குச் சொந்தமானது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் அருகில் தான் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்”என்று வாதிடப்பட்டது. அப்போது, விரிவான வாதங்கள் வேண்டாம் என்றும் இடைக்கால உத்தரவுக்கான வாதங்கள் மட்டும் வைக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.