பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்விக்கு என்ன காரணம்? - விஞ்ஞானிகள் குழு ஆய்வு

ராக்கெட் புறப்பட்டு 8 நிமிடங்களுக்கு பிறகு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 12-ந்தேதி காலை 10.18 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக பாதை மாறியதால் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் அதில் பொறுத்தப்பட்டிருந்த 16 செயற்கைக்கோள்களும் விண்வெளியில் தொலைந்து போனது. இதனால் இந்தியாவின் விண்வெளி லட்சியங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
260 டன் எடையுள்ள பி.எஸ்.எல்.வி. -டிஎல் ரக ராக்கெட் வானத்தை நோக்கி இடி முழக்கத்துடன் சென்றாலும், முதல் 2 நிலைகள் வெற்றிகரமாக செயல்பட்டது. இருப்பினும், 3-ம் கட்டம் செயல்பட்டு கொண்டு இருக்கும்போது, திட்ட கட்டுப்பாட்டு அறை அமைதியானது. காரணம் சுற்றுப்பாதை செருகல் தோல்வியை உறுதிப்படுத்தியது. ராக்கெட்டின் 3-ம் கட்டத்தின் முடிவில் ராக்கெட்டின் செயல்திறன் பெயரளவிற்கு மட்டுமே இருந்தது.
செலுத்துவதில் இடையூறு மற்றும் ராக்கெட் பாதையில் ஒரு விலகல் காணப்பட்டது. திட்டம் தோல்விக்கான காரணம் என்ன? என்று அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்திய மாணவர் செயற்கைக்கோள், தனியார் நிறுவன சோதனைகள் மற்றும் ஸ்பெயினின் கிட் உள்பட 15 செயற்கைக்கோள்களுடன், கடல்சார் கண்காணிப்புக்காக மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) இ.ஓ.எஸ்.என்-1 (அன்வேஷா) முதன்மை செயற்கைக்கோளை எடுத்துச்செல்லும் இந்த பணி, 505 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டிருந்தது. ராக்கெட் புறப்பட்டு 8 நிமிடங்களுக்கு பிறகு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.
இந்த நிலையில் தற்போது தோல்விக்கான காரணங்களை அறிந்து கொள்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஸ்ரீஹரிகோட்டாவில் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ராக்கெட் புறப்பட்ட நேரத்திலிருந்து அதனுடைய பாதை மாறியது வரை உள்ள நிகழ்வுகள் ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்விக்கான முழு காரணம் என்ன? என்று தெரியவரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






