

மும்பை
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்தி விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோரை மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்பட 8 பேர் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆர்யன் கானுக்கு மும்பை ஐகோர்ட்டு வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. ஆர்யன் கான் இன்று (அக்டோபர் 30) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அர்பாஸ் மெர்ச்சண்ட் : ஆர்யன் கானின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்ட் அவரிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூறி உள்ளது. அர்பாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு சிறையில் இருந்து வெளியே வருவார்.
முண்முண் தமேச்சா - அவரிடம் 5 கிராம் கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அவரது விடுதலைக்கான நடைமுறைகள் முழுமையடையவில்லை.
கோமித் சோப்ரா, நுபுர் சரிகா மற்றும் இஷ்மீத் சிங் - இவர்கள் மூன்று பேரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர் மற்றும் பயன்படுத்தியதற்கான குற்றங்களையும் எதிர்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மணீஷ் ராஜ்காரியா - கப்பலில் பயணித்த அவர் 2.4 கிராம் கஞ்சாவுடன் கண்டுபிடிக்கப்பட்டார். செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர் ஏற்கனவே சிறையில் இருந்து வருகிறார்.
அவின் சாஹு - ஒரு உல்லாசப் பயணி, ஆனால் அவர் வசம் எந்த போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர் சிறையில் இருந்து வருகிறார்.
கோபால் ஆனந்த், சமீர் சைகல், மானவ் சிங்கால் மற்றும் பாஸ்கர் அரோரா - இவர்கள் கப்பல் பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் என்று கூறப்படுகிறது. அனைவருக்கும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
ஆச்சித் குமார் : ஆர்யன் கான் மற்றும் அர்பாஸ் மெர்ச்சன்ட் ஆகியோருக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாகக் கூறப்படுபவர். இவர் 2.6 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் நாயர் - போதைப்பொருள் சப்ளையர் என்று கூறப்படுபவர் மற்றும் 2 கிராம் கஞ்சா அவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கும் ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
மோஹக் ஜஸ்வால் மற்றும் விக்ராந்த் சோக்கர் - இவர்கள் மீது போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 27ஏ குற்றத்தின் கீழ் ஆட்கடத்தல் குற்றம் சாட்டப்பட்டது. ஜஸ்வாலின் ஜாமீன் மனு தீபாவளிக்கு பிறகு விசாரணைக்கு வரும். சோக்கரும் ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் அவரது மனு இன்னும் விசாரிக்கப்படவில்லை.
விசாரணை அமைப்பின் தகவல்படி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என கூறப்படுபவர்கள் பின்வருபவர்கள் அவர்கள் இதுவரை ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை.
அப்துல் காதர் - ஒரு சப்ளையர் எனக் கூறப்பட்ட இவர், 54.3 கிராம் மெபெட்ரோன் மற்றும் 2.5 கிராம் எக்ஸ்டசி ஆகிய போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சினேடு இக்வே - போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர்,இக்வே 40 போதை மாத்திரைகள் (15 கிராம் ) வைத்திருந்தார்.
சிவராஜ் ராம்தாஸ் ஹரிஜன் - கஞ்சா சப்ளையர் என்று கூறப்படும் இவர் மெர்சன்ட்டுடன் தொடர்புடையவர், அவரிடமிருந்து 62 கிராம் 'கஞ்சா போன்ற' பொருள் மீட்கப்பட்டது.
ஒகாரோ உசியோமா - வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது வெளிநாட்டவர். அவரிடம் 14 கிராம் கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.