‘வாட்ஸ்அப்’ அழைப்புகள், தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா? - தயாநிதிமாறன் கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்

‘வாட்ஸ்அப்’ அழைப்புகள், தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா? என்ற தயாநிதிமாறன் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.
‘வாட்ஸ்அப்’ அழைப்புகள், தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா? - தயாநிதிமாறன் கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
Published on

புதுடெல்லி,

வாட்ஸ்அப் அழைப்புகள், தகவல்கள் மற்றும் பேஸ்புக், வைபர், கூகுள் மற்றும் பிற சமூக ஊடகங்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா?, அப்படி இருந்தால் அதற்கு முறைப்படி முன்அனுமதி பெறப்படுகிறதா?, அதில் மரபுகள் எதுவும் பின்பற்றப்படுகிறதா?, இஸ்ரேல் நாட்டின் பிகாசிஸ் மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தப்படுகிறதா? என்று நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்து பேசியதாவது:-

வாட்ஸ்அப் அழைப்புகள், தகவல்கள் மற்றும் பேஸ்புக், வைபர், கூகுள் போன்ற இணையதள சேவைகளை நாட்டின் இறையாண்மை கருதியும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 69-ன் படியும், இந்திய தொலைதொடர்பு சட்டம் 1885 பிரிவு 5-ன் படியும் உளவுத்துறை, போதைப்பொருள் தடுப்புபிரிவு, அமலாக்கத் துறை, மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம், மத்திய வருவாய் புலனாய்வு துறை, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை உள்பட 10 அமைப்புகளுக்கு உளவு பார்க்க முழு அதிகாரம் உள்ளது.

இதுபோன்ற வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் இணையதள சேவைகளை உளவு பார்க்க எந்த ஒரு அமைப்புக்கும் நேரடி அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட விவகாரங்களில் மத்திய உள்துறை செயலாளர் அல்லது மாநிலத்தில் உள்ள உள்துறை செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் மத்திய கேபினட் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்த பின்னர் அனுமதி அளிக்கும். மத்திய அளவில் கேபினட் செயலாளர் தலைமையிலான குழுவும், மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவும் கூடி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com