முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது அய்யப்ப பக்தராக மாறினார் - கேரள பாஜக தலைவர் கேள்வி

அடுத்த மாதம் 20-ந் தேதி பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்,
திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அடுத்த மாதம் 20-ந் தேதி பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சங்கமத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை கேரள தேவஸ்தானத் துறை மந்திரி வாசவன் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பம்பையில் நடத்தப்படும் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் அரசியல் நாடகம். இதனை அரசியலாக்க வேண்டாம் என பினராயி விஜயன் கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார். அய்யப்ப பக்தர்கள் சங்கமம், அரசியல் இல்லையென்றால் தேவஸ்தான தலைவர் தான் சென்னைக்கு சென்று இருக்க வேண்டும்.
அங்கு மந்திரிக்கு என்ன வேலை. எதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தீர்கள். அவர் எப்போது அய்யப்ப பக்தரானார். இது அரசியல் நாடகம். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அய்யப்ப பக்தர்கள் சங்கமம் அரசியல் நாடகம் அல்லாமல் வேறென்ன?
அய்யப்ப பக்தர்கள் சங்கமம் அரசு நிகழ்ச்சியல்ல, தேவஸ்தானம் நடத்தும் நிகழ்வு என பினராயி விஜயன் கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாத, தேவஸ்தானத்திற்கு இது தேவை தானா? என கேள்வி எழுகிறது. அய்யப்ப பக்தர்களை வேட்டையாடிய பினராயி விஜயன், அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க தகுதி இல்லாதவர். இவ்வாறு அவர் கூறினார்.






