

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகளுக்கான மையம் என்ற அமைப்பு சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இயற்கை வளங்கள் அனைத்தும் வாகனங்கள் ஓட்ட பயன்படும் எரிபொருட்களாக செலவழிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வாயுவால் இயக்கப்படும் வாகனங்களிலும் கரியமில புகை வெளியேறுகிறது. இதனால் சுற்றுச்சூழலும் பாதிப்பு அடைகிறது. அரசு துறைகள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் படிப்படியாக மின்சக்தியில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும் என்று 2012-ம் ஆண்டு மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தது.
இந்த கொள்கை முடிவு எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த கொள்கை முடிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் அரசிடம் விளக்கம் கோர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் இந்த மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.