மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது எந்த கவர்னரும் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக இருந்ததில்லை; புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது எந்த கவர்னரும் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக இருந்ததில்லை என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி
Published on

தேர்தலை புறக்கணிக்க...

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது கட்சியின் ஆண்டுவிழாவில் பேசும்போது, மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார். காங்கிரஸ் கட்சி தயாரா? என்று சவால் விடுக்கும் வகையில் பேசினார். அவரது கேள்விக்கு புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று பதில் அளித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-

மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்கும் ரங்கசாமியின் சவாலை ஏற்கிறோம். இதன் மூலம் அவர் மாநில வளர்ச்சி திட்டங்களை கவர்னர் தடுக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதைத்தான் நாங்களும் இவ்வளவு நாட்களாக சொல்லி வருகிறோம்.

மக்கள் நல திட்டங்கள்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ரங்கசாமி முதல்-அமைச்சராக இருக்கும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது இருந்த கவர்னர்கள் யாரும் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக இல்லை. முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி அனுப்பிய அனைத்து கோப்புகளுக்கும் கையெழுத்திட்டு அனுப்பினார்கள். அதை ரங்கசாமியும் மறுக்கமாட்டார்.

இப்போது மாநிலத்தில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற யார் தடையாக இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியும். நாங்களும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இப்போது தேர்தல் புறக்கணிப்புக்கு முன்பாக அவர் டெல்லிக்கு சென்று ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரியை சந்திக்க வேண்டும். அவர் இதுதொடர்பாக எங்களை அழைத்தால் நாங்களும் வர தயாராக இருக்கிறோம்.

சட்ட திருத்தம்

ஏனெனில் அவர்தான் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் சட்டத்தில் நிர்வாகி என்று இருப்பதை அமைச்சரவை என்று மாற்றவேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். தற்போது நாடாளுமன்றம் நடந்துகொண்டிருப்பதால் நாம் வலியுறுத்தலாம்.

கவர்னர் கிரண்பெடி யாருக்கும் பிரயோஜனம் இல்லாதவர். சாலைபோடவோ, இலவச அரிசி, முதியோர் பென்சன் என எதுவும் வழங்கவோ அவர் அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம்.

வெற்றிபெற முடியாது

புதுவை வந்த பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். புதுவையின் கவர்னராக கிரண்பெடி இருக்கும் வரை பாரதீய ஜனதாவால் நிச்சயம் வெற்றிபெற முடியாது. அவர் மீண்டும் எங்களை வெற்றிபெற செய்துவிட்டுதான் புதுவையை விட்டு போவார்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com