

கொல்கத்தா,
நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் போராட்டம் நடத்தினார். இதனால் ராஜீவ் குமாரை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டை சி.பி.ஐ. நாடியது.
விசாரணை முடிவில், ஷில்லாங் நகரில் சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இந்த வார இறுதிக்குள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக சி.பி.ஐ.க்கு ராஜீவ் குமார் கடிதம் எழுதினார்.
இது குறித்து சி.பி.ஐ. தரப்பில் கூறுகையில், ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்து உள்ளார். அவரிடம் எப்போது விசாரணை நடத்துவது என்று ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த வார இறுதியில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றனர்.