உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? - தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? - தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
Published on

புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளதால் அது மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை நடந்து வருவதாகவும், இந்த பணி நிறைவு பெற்று தொகுதி மறுவரையறை தொடர்பான அறிவிப்பாணை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின் தனது வாதத்தில், வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கும் வகையில் அவகாசம் கோரி தமிழக அரசு தரப்பில் கடிதம் ஒன்று கோர்ட்டுக்கு தாக்கல் செய்ததாக நகல் ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது.

தமிழக அரசு தரப்பில் மேலும் அவகாசம் கோருவது ஏற்கும் வகையில் இல்லை. உள்ளாட்சி தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கை இன்றே விசாரித்து தேர்தலை உடனடியாக அறிவிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நரசிம்மா, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இது தொடர்பான பிரமாண பத்திரம் ஒன்று ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வார்டு மற்றும் பஞ்சாயத்து தொகுதிகளின் மறுவரையறை பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. அந்த பணி முடிவடைந்ததும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கின் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com