ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? - மத்திய மந்திரி விளக்கம்

ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? - மத்திய மந்திரி விளக்கம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு பயணம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முன்பதிவை அனுமதிக்கவில்லை.

ஆனால், ஏர் இந்தியா உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள், மே 4-ந் தேதி முதல், சில குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய்ய முன்பதிவை அனுமதித்துள்ளன. இதனால், ரெயில், விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

ரெயில், விமான போக்குவரத்தை என்றாவது ஒருநாள் தொடங்கித்தான் ஆக வேண்டும். அந்த ஒருநாள் எது? என்பது இப்போது யாருக்கும் தெரியாது. அதைப்பற்றி இப்போது விவாதிப்பது பயனற்றது.

ஏனென்றால், ஒவ்வொரு நாளும் அன்றைய நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. சில விமான நிறுவனங்கள், தாங்களாகவே டிக்கெட் முன்பதிவை தொடங்கி உள்ளன. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெளிவுபடுத்தி உள்ளார்.

அதாவது, விமான போக்குவரத்தை எப்போது தொடங்குவது? என்று மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. மத்திய அரசு முடிவு செய்த பிறகு, டிக்கெட் முன்பதிவை தொடங்குங்கள் என்று ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com