

புதுடெல்லி,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த 10ம் தேதி டெல்லி திரும்பியுள்ளனர். அதன்படி இன்னும் 3 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. வழக்கமாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். எனவே, 5 மாநில தேர்தல் தேதி வெளியாகும் தேதி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகளை, இந்திய தேர்தல் ஆணையம் வரும் செவ்வாய்கிழமை (17.3.26) மாலை 3 மணிக்கு அறிவிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது. மேலும் மேற்கு வங்காளத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் 5 மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.