

புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட மறு தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து ஜூன் 25-ஆம் தேதி தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, மாணவர்களிடமிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டன. தற்போது அவற்றை பாட நிபுணர்கள் ஆய்வு செய்து இறுதி விடைக்குறிப்பை தயாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறு தேர்வு காரணமாக மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறை தாமதமடையாது என்றும், முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வு திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, நீட் மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெற்றது