நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? வெளியான புதிய தகவல்

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
Published on: 

புதுடெல்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொகுதி மறுவரையறையுடன் தொடர்புடைய அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 543-ல் இருந்து அதிகபட்சமாக 850 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எம்பிக்கள் எண்ணிக்கை

இந்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. தற்போது 540 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில், 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அவசியமாகியுள்ளது.இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன.

மத்திய அரசு திட்டம் என்ன?

மேலும், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை அதிகரித்து, மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய விகிதாசாரத்தை தக்கவைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

X