

புதுடெல்லி,
இந்தியாவில் கல்வி தரத்தில் முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் என்ற தகவலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், பள்ளி கல்வி வளர்ச்சி குறியீடு எப்படி உள்ளது? என்பது குறித்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-2026-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக, பள்ளி கல்வியின் வளர்ச்சி குறியீடானது, அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது. இதில், பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் போன்ற காரணிகளும் அடங்கும்.
2025-2026-ம் ஆண்டிற்கான பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டு தரவரிசையில் சண்டிகர் முதல் இடம் பிடித்துள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம்தான் கிடைத்துள்ளது. முறையே 3-வது இடத்தை புதுச்சேரியும், 4-வது இடத்தை கோவாவும், 5-வது இடத்தை தலைநகர் டெல்லியும், 6-வது இடத்தை பஞ்சாப்பும் பிடித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த முறையைவிட தனது மதிப்பெண்ணை 0.018 அதிகரித்தாலும், 7-வது இடத்தையே தமிழ்நாட்டால் தக்கவைக்க முடிந்தது. 8-வது இடத்தை அந்தமான் நிகோபார் தீவும், 9-வது இடத்தை லட்சத்தீவும், 10-வது இடத்தை அரியானாவும் பிடித்துள்ளது. ஏனைய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதைவிட பின்தங்கியே உள்ளன.