இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் முதலிடம் எது..? லிஸ்டில் சென்னை உள்ளதா..?

கோப்புப்படம்
முழுக்க முழுக்க மக்களிடம் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ பெறப்பட்ட தரவுகளை உள்ளடக்கி இது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
உலகெங்கிலும் மக்கள் வாழும் இடங்களின் வாழ்க்கைச் செலவும், குற்றம், சுகாதாரம், போக்குவரத்து சுற்றுச்சூழல்தரம் ஆகியவை குறித்து நேரடியாக மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவிட்டு அதன் அடிப்படையில் நாடுகள், நகரங்களில் பாதுகாப்பானவை எவை? என்பது குறித்த புள்ளிவிவரங்களை செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நம்பியோ என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
இது அரசுகள் வைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையிலானது இல்லை. முழுக்க முழுக்க மக்களிடம் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ பெறப்பட்ட தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான பாதுகாப்பான நாடுகள், நகரங்கள் பட்டியலை இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்..?
இதில் குற்றவிகிதம், பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வன்முறை குற்றங்கள், திருட்டு, உடைமைகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சொத்துகள் சார்ந்த குற்றங்கள், நிறம், இனம், மதம் மற்றும் பாலின ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்களா?, போதைப்பொருள் பயன்பாடு பிரச்சினையாக இருக்கிறதா? ஆகியவற்றை நேரடியாக மக்களிடம் கருத்துகளாக பெற்று அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, நாடுகள், நகரங்களின் பாதுகாப்பு குறியீட்டை பட்டியலாக வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த நாடுகளில் பாதுகாப்பான நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கடுத்தபடியாக அன்டோரா, கத்தார், தைவான், மக்காவ் (சீனா), ஓமன், மாண்தீவு, ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இதில் இந்தியாவுக்கு 67-வது இடமும், அமெரிக்காவுக்கு 91-வது இடமும் கிடைத்துள்ளது.
லிஸ்டில் சென்னை உள்ளதா..?
உலகில் பாதுகாப்பான நகரங்கள் லிஸ்டில் முதல் 2 இடங்களை ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியும், அஜ்மானும் பெற்றிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து தோஹா (கத்தார்), துபாய் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), ராஸ் அல் கைமா (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), ஷார்ஜா (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), தைபே (தைவான்), மஸ்கட் (ஓமன்) ஆகிய நகரங்கள் வருகின்றன.
இந்தியாவை எடுத்துக்கொண்டால், பாதுகாப்பான நகரங்கள் லிஸ்டில் மங்களூருவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலகளவில் 49-வது இடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, வதோரா (குஜராத்), அகமதாபாத் (குஜராத்), சூரத் (குஜராத்), நவிமும்பை (மராட்டியம்), திருவனந்தபுரம் (கேரளா), சென்னை (தமிழ்நாடு), புனே (மராட்டியம்), சண்டிகர் ஆகியவை இருக்கின்றன.
கடந்த ஆண்டு (2024) பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு பாதுகாப்புக் குறியீடு பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






