உத்தரபிரதேச அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார்? - பிரியங்கா கேள்வி

உத்தரபிரதேச அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார் என பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரபிரதேச அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார்? - பிரியங்கா கேள்வி
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை போனில் அழைத்த மாநில மந்திரி சுவாதி சிங், அந்த வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளார். இது ஒரு மேலிடத்து வழக்கு எனவும், இது குறித்து முதல்-மந்திரிக்கும் தெரியும் என்றும் அவர் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

இந்த ஆடியோ பதிவு மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மாநில அரசு மீது குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், இது மேலிடத்து உத்தரவு எனவும் உத்தரபிரதேச பா.ஜனதா அரசை சேர்ந்த மந்திரி ஒருவர் கூறுகிறார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை விரும்பாத இந்த மேலிடத்து நபர்கள் யார்? யார்? மாநிலத்தில் ஏராளமான ஊழல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com