அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிக்கு ஒப்புதல்; இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? - சுப்பிரமணியன் சாமி அதிருப்தி

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிக்கு ஒப்புதல்; இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? - சுப்பிரமணியன் சாமி அதிருப்தி
Published on

புதுடெல்லி,

ஓராண்டுக்கு முன்பாக சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்திவருகிற கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா இன்னும் போராடுகிறது.

உலகளவில் அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனாவின் மோசமான கோரப்பிடியில் சிக்கியுள்ள 2வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. ஆனாலும், இந்த ஓராண்டு காலத்தில் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான போராட்டத்தால், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல சுகாதார கட்டமைப்புகளை கொண்டு, தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

தடுப்பூசியை பொறுத்தமட்டில் இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்க இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் இரண்டாவது, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.

ரஷிய தடுப்பூசியான ஸ்புட்னிக்வி தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் வினியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

இந்திய சீரம் நிறுவனம் தனது விண்ணப்பத்தில், பாதுகாப்பை பொறுத்தமட்டில் கோவிஷீல்டு, நல்ல சகிப்புத்திறன் கொண்டது, எதிர்வினைகளில் பெரும்பாலானவை லேசானவை, எந்தவித நீடிப்பும் இன்றி தீர்க்கப்பட்டவை. எனவே கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது, கொரோனாவை தடுப்பதற்கு திறம்பட பயன்படுத்தப்படலாம் என கூறி உள்ளது.

இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய கூடுதல் தரவுகளை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), இந்திய சீரம் நிறுவனத்திடம் கேட்டது. அந்த நிறுவனமும், கேட்கப்பட்ட தரவுகளை வழங்கி விட்டது.

இதற்கு மத்தியில், இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இங்கிலாந்து நாட்டின் மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அதே நாளில், கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக இந்திய சீரம் நிறுவனம் வழங்கிய கூடுதல் தரவுகளை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுனர் குழு ஆராய்ந்தது. நேற்று அந்த குழு மீண்டும் கூடி மதிப்பாய்வு செய்தது.

இதையடுத்து இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்க வல்லுனர் குழு தனது பரிந்துரையை வழங்கி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தனது ஒப்புதலை ஓரிரு நாளில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் 7 கோடி டோஸ்களை தயாரித்து கைவசம் வைத்திருப்பதாகவும், இந்த வாரத்தில் அது 10 கோடி டோஸ்களாக உயரும் என்றும் இந்திய சீரம் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் உமேஷ் சாலிகிராம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-

உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்காத நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com