டெல்லி வன்முறைக்கு காரணம் யார்? பா.ஜனதா தலைவர்களிடையே மோதல்

டெல்லி வன்முறைக்கு காரணம் யார் என்பது குறித்து பா.ஜனதா தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
டெல்லி வன்முறைக்கு காரணம் யார்? பா.ஜனதா தலைவர்களிடையே மோதல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் டிசம்பர் மாதம் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் இதை எதிர்த்து நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் தினந்தோறும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லியில் நேற்று முன்தினம், தொடர்ந்து இரண்டாவது நாளாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. வடகிழக்கு டெல்லி கலவர பூமியானது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ், பஜன்புரா பகுதிகள் வன்முரையால் போர்க்களமாக மாறியது.

கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தபட்டது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 48 போலீசாரும், பொது மக்களில் 98 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் பலியானதாக

முதல் நாள் தெரிவிக்கப்பட்டது

தலைநகரில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து 144-ன்கீழ் போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது .இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 24-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவுக்கு பணியாமல் நேற்றும் கிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் நேற்று மட்டும் 6 பேர் இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தாக குருதேக் பகாதூர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த கலவரத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜனாதவின் எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெல்லியைப் பொறுத்தவரை பா.ஜனதாவின் மிக முக்கிய நபராக இருப்பவர் கபில் மிஸ்ரா. இவர் சமீபத்தில் நடந்த டெல்லி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார். இவர் கூறிய கருத்துகள் தான் கலவரத்துக்கு காரணம் என்று பல எதிர்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதைக் கண்டித்த கபில் மிஸ்ரா,

`ஷாகின் பாக் போல டெல்லியின் மற்றொரு சாலையும் மறைக்கப்பட்டுவிட்டது, இப்படியே போனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய முடியாது என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதே ஜாப்ராபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என டுவிட்டரிலேயே அழைப்பு விடுத்திருந்தார்.

இவரின் இந்த அழைப்பை கண்டித்த கவுதம் கம்பீர், ``கபில் மிஸ்ராவாகட்டும் இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், டெல்லியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது யாராக இருந்தாலும் அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷாகீன் பாக் போராட்டம் ஒரு மாதமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. நம் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்திருக்கும் இந்த வேளையில் இங்கு வன்முறை நடப்பது சரியானதல்ல. அமைதியாக போராடினால் எந்த பிரச்சினையும் இல்லை மாறாக கற்களை கையில் எடுத்ததால் தான் விளைவு ஆபத்தாக முடிந்து உள்ளது. ஒருவர் துப்பாக்கியுடன் எப்படி தைரியமாக காவலர்கள் முன்பே நிற்க முடியும் என கேள்வி எழுப்பி இருந்தார்.

கவுதம் கம்பீர், கபில் மிஸ்ரா ஆகிய இருவருமே பா.ஜனதா சேர்ந்தவர்கள், சொந்த கட்சியைச் சேர்ந்தவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பீர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com