உத்தரகாண்ட் புதிய முதல்-மந்திரி யார்? பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நாளை தேர்வு

உத்தரகாண்டில் நாளை பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
உத்தரகாண்ட் புதிய முதல்-மந்திரி யார்? பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நாளை தேர்வு
Published on

டேராடூன்,

பா.ஜ.க. வெற்றி

நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை பிடித்தது.

ஆனாலும் அந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி (வயது 46) காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் புதிய முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்த நிலையில் டேராடூனில் நாளை (திங்கட்கிழமை)பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டசபை பா.ஜ.க. தலைவர் (புதிய முதல்-மந்திரி) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு ராஜாங்க மந்திரி மீனாட்சி லேகியும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவல்களை மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதாப் சாம்ஸ் தெரிவித்தார்.

யாருக்கு வாய்ப்பு?

புதிய முதல்-மந்திரி பதவிக்கு, தேர்தலில் தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமி பெயர்தான் பலமாக அடிபடுகிறது. மற்றபடி, சத்பால் மகாராஜ், தன்சிங் ராவத், அனில் பலூனி ஆகியோருடைய பெயர்களும் அடிபடுகின்றன.

ஆனாலும் புஷ்கர்சிங் தாமி இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாலும், அவரது பெயரில் பா.ஜ.க. போட்டியிட்டு பெரிய வெற்றியை பதிவு செய்திருப்பதாலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என்றும் மாநில பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் முதல்-மந்திரியாக தேர்வு பெற்றால், போட்டியிட்டு வெற்றி பெற வசதியாக சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தங்கள் தொகுதியை வழங்க தயாராக உள்ளனர்.

பதவி ஏற்பு விழா

புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெறலாம் எனவும், அதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகள் பலரும் கலந்து கொள்ளக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com