டெல்லியில் அதிகாரம் யாருக்கு? சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றம்

டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்பதில் சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளது. இதனால் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
டெல்லியில் அதிகாரம் யாருக்கு? சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றம்
Published on

புதுடெல்லி,

டெல்லியை ஆளும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் என்பதில் மோதல் போக்கு உள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 9 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதிகள் நேற்று தங்களது தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பானது, பல விஷயங்களில் ஒருமித்ததாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் நியமனம், இடமாறுதல், அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் போன்றவற்றில் மாறுபட்டதாக உள்ளது. இதனால் வழக்குகள், 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* லஞ்ச ஒழிப்பு போலீஸ், விசாரணை கமிஷன்களை நியமிக்கும் அதிகாரம் முற்றிலும் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்று 2 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை வழங்கினர்.

* மின்சார சட்டம், மின்சார சீர்திருத்த சட்டம் ஆகியவற்றை பொறுத்தவரையில் டெல்லி அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று 2 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர்.

* மத்திய அரசின் அதிகாரிகள், ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை டெல்லி மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க முடியாது என்ற மத்திய அரசு அறிவிக்கை செல்லுபடியாகும் என 2 நீதிபதிகளும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

* அரசு வக்கீல்கள், சட்ட அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை கவர்னருக்கு கிடையாது, மாநில அரசுக்குத்தான் உண்டு என கூறி உள்ளனர்.

3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்

* அரசுத்துறை செயலாளர்கள் நியமனம், இடமாற்றம் போன்ற விவகாரங்களில் இரு நீதிபதிகளும் மாறுபடுகின்றனர். வெளிப்படையான நிர்வாகம் என்ற வகையில் கிரேடு 3 மற்றும் 4 ஊழியர்கள் நியமனத்துக்கு சிவில் சர்வீஸ் வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஏ.கே. சிக்ரி கூறி உள்ளார். ஆனால் நீதிபதி அசோக் பூஷண் சட்டப்படி, பணியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரமே மாநில அரசுக்கு இல்லை என்று கூறி உள்ளார். இவ்விவகாரத்தில்தான் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை டெல்லி பாரதீய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள மாறுபட்ட தீர்ப்பில் தெளிவு இல்லை, டெல்லி மக்கள் தொடர்ந்து அவதியுறுகிற நிலை தொடரும் என ஆம் ஆத்மி கட்சி கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com