வாக்காளர் பட்டியல் திருத்த பணி; ஆதாரை ஆவணமாக ஏற்க பரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
புது டெல்லி,
பீகாரில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் கமிஷன், அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொண்டு உள்ளது. பொதுவாக தேர்தல் கமிஷன் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு ஆண்டுக்கு 4 முறை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி என்பது முற்றிலும் வேறுபாடானது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் ஒரு விரிவான நடவடிக்கையாகும். பீகாரில் இந்த பணியில் 98,498 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடு்பட்டு உள்ளனர். இதுதவிர ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணிக்காக அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகின்றனர். அதோடு வாக்காளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதோடு மிக முக்கியமாக 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்களது பெற்றோர்களின் குடியிருப்பு ஆவணங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அந்தப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்வார் என்றெல்லாம் கூறப்பட்டு இருந்தது. பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம்தான் முடிவெடுக்க முடியும் என்றும் ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னரே இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கலாமே? என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது: "ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக கருதுங்கள். 11 ஆவணங்களின் பட்டியல் முழுமையானது அல்ல என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறியிருக்கிறார். எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை பரிசீலியுங்கள்" எனக்கூறியது. இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் , அதுவரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டனர்.






