ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

புயல் சேத பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றது ஏன் என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Published on

புதுடெல்லி,

புயல் சேத பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று பார்த்தது ஏன் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

புயலால் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட சாலை மார்க்கமாக ஏன் செல்லவில்லை என்று கேட்கிறார்கள். சாலை மார்க்கமாக சென்ற மு.க.ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்வையிட்டார்?. இன்றைக்கு நான்கு மாவட்டம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. அதை எப்படி நடந்து போய் பார்ப்பீர்கள். நான் வந்து ஹெலிகாப்டர் மூலம் செல்கின்ற போது எல்லா புகைப்படத்தையும் எடுத்து வைத்திருக்கின்றேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மரங்கள் சாய்ந்திருக்கிறது. எவ்வளவு வாழை மரங்கள் சாய்ந்திருக்கிறது. எவ்வளவு தென்னை மரங்கள் சாய்ந்திருக்கிறது. தாழ்வாக பறந்து எல்லாவற்றையும் பார்வையிட்டோம். வேறுமென பார்வையிட செல்லவில்லை.

முழு சேதம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே என்ன பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான், நேரடியாக சென்றோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான புகைப்படங் களை பிரதமரிடத்தில் அளித்திருக்கிறேன். அவர் எந்தெந்த இடத்திற்கு போனார். மூன்று இடங்களுக்கு போய் பாதியிலே திரும்பி வந்துவிட்டார். வெறுமென இரண்டு மூன்று இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்தால், நிவாரணம் வழங்க முடியாது. உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே, இது தவறான செய்தி. மக்களுடைய உணர்வுகளை நன்கு உணர்ந்தவன். நன்றாக உணர்ந்த காரணத்தினால் தான், இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் செய்ய முடியாததை, புயல் வருவதற்கு முன்கூட்டியே மக்களை முகாம்களில் தங்க வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரைக்கும் யாரும் இதுபோல் செய்யவில்லை. அதுமட்டுமல்ல, அந்தந்த மாவட்ட அமைச்சர்களை முன்கூட்டியே அங்கேயே போய் தங்கி, இந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, புயல் அதிகாலை 2.30 மணிக்கு தாக்கியது. 4 மணிக்கு எல்லாம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் புயல் இவ்வளவு கடுமையாக சேதங்களை விளைவிக்கும் என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. பிறகு பார்க்கும் போது தான் இரண்டு நாட்களில் இவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பதை கணக்கிட்டு, எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது. நாம் எப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அதற்கு தக்கவாறு நடவடிக்கை எடுத்து, பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் எல்லாம் சாலைகளில் போகிறார்கள், பார்க்கிறார்கள், வந்துவிடுகிறார்கள். அவர்களது வேலை அதோடு முடிந்துவிட்டது. ஆனால் அரசாங்கம் அப்படியல்ல. எல்லா பகுதி மக்களுக்கும் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். உணவு கொடுக்க வேண்டும், தண்ணீர் கொடுக்க வேண்டும், மருத்துவ வசதி கொடுக்க வேண்டும், சாலைகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும், அதற்கு தக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால் தான் எத்தனை பணியாளர்களை அனுப்பி வைக்க முடியும் என்பது தெரியும். சேதம் அளவை கணக்கிட்டால் தான் எத்தனை பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்பது தெரியும்.

இந்த இரண்டு நாட்கள் கணக்கிடும் போது தான், மின்கம்பங்கள் சாய்ந்தது முதலில் 50 ஆயிரம் என்று சொன்னார்கள், பின்னர் 80 ஆயிரம் என்று சொன்னார்கள், இப்போது 1 லட்சத்து 3 ஆயிரம் ஆகி விட்டது. அதற்கு தக்கவாறு ஆங்காங்கே இருக்கின்ற மின்சார ஊழியர்களையும் எல்லாம் அனுப்பி வைத்தோம். அதுமட்டுமல்லாமல், பக்கத்து மாநிலத்திலிருந்து மின் ஊழியர்களை வரவழைத்து, அந்தப் பணிகளில் ஈடுபடுத்தினோம். இரவு பகல் பாராமல், மழையை கூட பொருட்படுத்தாமல் நம்முடைய மின்சார ஊழியர்கள் அந்த மின்கம்பங்களை நட்டு அதற்கு மின் இணைப்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மின்சார ஊழியர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்த வேண்டாம். பொதுமக்களுக்கு இயல்பு நிலை திரும்புவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com