

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியும் ஆன ப. சிதம்பரம் எம்.பி., ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சூரம்பட்டியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் 16-ந் தேதி (நாளை) நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த அரசியல் சாசன திருத்தத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே இந்த மசோதாவை தோற்கடிப்போம்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்வதால் நமது 40 தொகுதிகள் 60 ஆக உயரும் என்கிறார்கள். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் போது தொகுதிகள் குறையும். தென் மாநிலங்களின் துணை இன்றி வடக்கே சில மாநிலங்களில் வெற்றி பெற்றாலே பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியும். தமிழ்நாட்டின் குரல் அங்கே கேட்கவே கேட்காது. எனவேதான் காங்கிரஸ், தி.மு.க. இதை எதிர்க்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2025-2026 நிதி ஆண்டில் வளர்ச்சி குறித்து மோடி தலைமையிலான மத்திய அரசின் நிதி ஆயோக் ஒரு அறிக்கை அளித்துள்ளது. வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதுபோல் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கியதிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
இவ்வாறு முதல் இடத்தில் உள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் இந்த திட்டங்களில் உள்ள உதவித்தொகைகளை அதிகரித்து தரப்போகிறார். இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்க உள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடரவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து மீண்டும் மு.க. ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.