'டபுள் இன்ஜின்' அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி கேள்வி

மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
'டபுள் இன்ஜின்' அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி கேள்வி
Published on

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

மணிப்பூர் படுகொலைகளை வேடிக்கை பார்க்கிறது இரட்டை என்ஜின் அரசு. 3 மாதங்களாக மணிப்பூரில் கலவரங்கள், படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி, அம்மாநில முதல்-மந்திரி ஆகியோர் தவறிவிட்டனர். டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்?. மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நிவாரண முகாமில் போதிய வசதிகளோ, உணவு, குடிநீரோ இல்லை. மணிப்பூர் வன்முறையில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் அவலநிலையில் உள்ளனர். காவல்துறையினர் அதிகமாக இருந்தும் மணிப்பூரில் வன்முறையை தடுக்கவில்லை. பெண்கள் துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியான பின்னர் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா?. கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா?. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள்; அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது.

பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக அரசு மிரட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com