

புதுடெல்லி
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்து இருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சரான பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும். இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று சேர்ந்த அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மாலை 4.10 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டார். புதிதாக கட்டப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் பிரதமரை சந்திப்பது என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பின்படி இந்த சந்திப்பு என்பது கட்டாயமில்லை. ஆனாலும், கூட்டாட்சிக்கான மரபாக இது நடைமுறையில் உள்ளது. இதனை முன்னிட்டும், மரியாதை நிமித்தம் இரு தலைவர்களின் இந்த சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒப்புதல்களையும் அவர் கோர இருக்கிறார். அப்போது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கிறார். சென்னை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி கோர இருக்கிறார். இதன்பின்னர் மாலை 6.30 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இரவு 7.30 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், மந்திய மந்திரிகளையும் சந்திக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. நாளை மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிற முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இதன்பின்பு முதல்-அமைச்சர் விஜய் 28-ந்தேதி சென்னை திரும்புகிறார்.