

புதுடெல்லி,
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் ஓய்வுபெற்றார். அவரை மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அசோக்பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கின் மீதான இறுதி வாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று வாதங்களை தொடர்ந்தார்.
அவர் தன்னுடைய வாதத்தில், இந்த அதிகாரி சரியான ஆய்வுகள் இன்றி செயல்படக்கூடியவர் என்பதால் நாங்கள் இந்த பணிநீட்டிப்பை எதிர்க்கிறோம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் என்பதால் சென்னை ஐகோர்ட்டும் இவருடைய தவறுகளை கண்டுகொள்வது இல்லை என்று கூறினார்.
சிலை கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை தவிர வேறு எந்த விவரமும் அரசுக்கு தெரியாது. விசாரணை அறிக்கைகளை ஏன் மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்? இந்த அதிகாரி மீது 66 சக போலீஸ் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதேபோல இந்த வழக்கின் மனுதாரர் யானை ராஜேந்திரன் மீதும் நில அபகரிப்பு புகார்களும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்து அறநிலையத்துறை அலுவலர்கள், டி.ஜி.பி. ஆகியோர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் பஸந்த் வாதங்களை தொடங்கினார். இந்த வழக்கில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது. அவை வெளியே வந்துவிடும் என்பதால் விசாரணையை முடக்கும் நோக்கில் தற்போது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். இந்த ஒரு ஆண்டு கூட அந்த அதிகாரி பணிபுரியக் கூடாது என்றால் மாநில அரசுக்கு இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து வழக்கின் மீதான விசாரணை இன்றும், (வியாழக்கிழமை) தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.