

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் பேசியதாவது:-
புதிய அத்தியாயத்தின் விடியலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடனும், அபிலாஷைகள் உடனும் ஜனாதிபதி உரையை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் பல வகைகளில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஜனாதிபதி உரை தேர்தல் வாக்குறுதி போல உள்ளது.
முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் 5.54 கோடி புதிய தொழில்முனைவோர் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்கள் தலா ஒரு வேலைவாய்ப்பை இந்தியாவில் உருவாக்குகிறார்கள் என்றால், வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது ஏன்? இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பணத்தின் மதிப்பும் குறைந்திருக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
சிறு நகரங்களின் வளர்ச்சி 45 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்றால், கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்கள் எதற்காக நகர்ப்புறங்களுக்கு படையெடுக்கிறார்கள்? அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதாக நீட் தேர்வினை மத்திய அரசு அமல்படுத்தியது. நீட் தேர்வு இந்திய மாணவர்களுக்கு எதிரானது. மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டவேண்டும் என்று அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
38 கோடி இந்தியர்கள் வங்கி கணக்கு தொடங்கியிருப்பதாக அரசு பெருமை கொள்கிறது. ஆனால் அவர்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து, தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்காக குறைந்தபட்ச தொகையை பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசு கொடுக்குமா? என்று அவர் பேசினார்.