

புதுடெல்லி,
கொரோனா கால நிவாரண நடவடிக்கையாக, வங்கிக்கடன் தவணை தொகை (இ.எம்.ஐ.) செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. ஆனால், இந்த சலுகை பெற்றவர்களுக்கு தவணை தொகை மீது வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.
இதுபற்றிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், பெருவணிகர்களுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரிச்சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால், நடுத்தர வகுப்பினருக்கு கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்யாதது ஏன்? இது ஒரு கோட்-சூட் அரசு என்பது நிரூபணமாகி விட்டது என்று அவர் கூறியுள்ளார்.