ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது ஏன்? - நேரலையில் நித்தியானந்தா விளக்கம்

“நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார்.
ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது ஏன்? - நேரலையில் நித்தியானந்தா விளக்கம்
Published on

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தலைமறைவாக இருந்து வரும் நித்தியானந்தா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்துவிட்டார்" என்று கூறினார். இதனால், நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான நித்தியின் புதிய யுக்தி இதுவா? என்பதை ஆமதாபாத் போலீசார் விசாரித்து வந்தனர். சமாதி அடைந்ததாக தகவல் பரவிய நிலையில் (ஏப்ரல் 03-ந் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பக்தர்களுக்கு விளக்கம் அளிப்பதாக நித்யானந்தா தெரிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று அதிகாலையில் யூடியூப் நேரலையில் நித்தியானந்தா தோன்றினார். அப்போது அவர் பேசியதாவது;

"இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசியாக வெளியிட்ட வீடியோ பழையது. கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்

மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்.

பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்"

இவ்வாறு அவர் பேசினார். அப்போது, இது நேரலைதான் என காட்டுவதற்கு யூடியூப் லைவில் கமென்ட் ஒன்றை நித்தியானந்தா படித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com