

பரீதாபாத்,
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் சியாம்வீர் (42). இவரது மனைவி கேசவ். இதற்கிடையில், கேசவுக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சியாம்வீருக்கு தெரியவந்தநிலையில், சியாம்வீருக்கும் கேசவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, கேசவும் காமத்தும் சேர்ந்து சியாம்வீரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 16-ம் தேதி மாலை காமத், சியாம்வீருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.
சியாம்வீர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்தபோது வீட்டிற்குள் இருந்து சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக, கேசவ் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சியாம்வீரின் சகோதரர் ராம்பீர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேசவ் மற்றும் காமத் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.