குடும்ப தகராறில் மனைவி அடித்து கொலை

அஜ்ஜாம்புராவில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடும்ப தகராறில் மனைவி அடித்து கொலை
Published on

சிக்கமகளூரு:

குடும்ப தகராறு

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா ஜாலடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தா. இவரது மனைவி இந்திரம்மா. இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கோவிந்தா மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் இந்திரம்மாவின் வீடு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் இந்திரம்மா பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக அஜ்ஜாம்புரா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அடித்து கொலை

அன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இந்திரம்மாவின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் கொலையான இந்திரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்திரம்மாவுக்கும், அவரது கணவர் கோவிந்தாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தா, இந்திரம்மாவை சரமாரியாக தாக்கி அடித்து, உதைத்துள்ளார். இதனால் இந்திரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தா அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கோவிந்தாவை வலைவீசி தேடி வருகிறார்கள். குடும்ப தகராறில் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com