திருமணமான 45 நாட்களில் காதலனுடன் ஓடிப்போன மனைவி... வேதனையில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

ஹரீஷ் தற்கொலை செய்வதற்கு முன்னதாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
திருமணமான 45 நாட்களில் காதலனுடன் ஓடிப்போன மனைவி... வேதனையில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
Published on

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் கும்மனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்கத்தில் ஹரீஷ், தனது மனைவியுடன் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்ததாக தெரிகிறது.

நாளடைவில் மனைவியின் நடவடிக்கையில் ஹரீஷ் மாறுபாட்டை கண்டுள்ளார். அதாவது அவரது மனைவி திருமணத்துக்கு முன்பே ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போதும் அந்த வாலிபருடன் அவர் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் ஹரீஷ் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஓடிப்போய்விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரீஷ் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தாவணகெரே புறநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்த ஹரீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் ஹரீஷ் தற்கொலை செய்வதற்கு முன்னதாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை அவரது வீட்டில் வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர், எனது மனைவி காதலனுடன் ஓடி சென்றுவிட்டார். எனது சாவுக்கு எனது மனைவி, மாமியார், மாமனார், மனைவியின் காதலன் ஆகியோர் தான் காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மனைவி என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். மேலும் என்னை கொன்றுவிடுவதாகவும் மிரட்டி வருகிறார். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனது சாவுக்கு காரணமானவர்களை சும்மாவிடக் கூடாது. எனது இறுதிச்சடங்குகளை பசவ தர்மம் படி மேற்கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாக எழுதியுள்ளார். இதுகுறித்து தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் காதலனுடன் ஓடிப்போனதால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com