

பெங்களூரு,
மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர் னேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (வயது 38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி சாலையோரம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததால் ஜவரப்பா சாவில் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதண்டி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜவரப்பா, மேஸ்திரியான சித்தேஷ் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். ஒருமுறை சித்தேசை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மனைவி அம்ருதாவை ஜவரப்பா அறிமு கம் செய்துள்ளார்.
அப்போது அம்ருதாவுடன் சித்தேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போனில் ரகசியமாக பேசி வந்தனர். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் ஜவரப்பாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தனது மனைவி அம்ருதாவை கண்டித்துள்ளார்.
இதன்காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் ஜவரப்பாவை தீர்த்துக்கட்ட அம்ருதாவும், சித்தேசும் திட்டம் தீட்டினர். இதையடுத்து கடந்த 16-ந்தேதி, ஜவரப்பாவை சித்தேஷ் தனது காரில் மது குடிக்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அதிகளவு மதுகுடிக்க வைத்து, மயக்கமடைந்த ஜவரப்பாவை சித்தேஷ் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் போலீசாரை திசை திருப்ப, விபத்து நடந்தது போல சித்தரித்து உடலை சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார். ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்த போலீசார், மனைவி அம்ருதா மீது சந்தேகப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மேஸ்திரி சித்தேசுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அம்ருதா மற்றும் சித்தேசை சரகூரு போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.