

அமராவதி,
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில், சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் டோலியில் சுமந்து சென்ற பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிட்டம்பாடு என்ற மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். போதிய சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தைச் சேர்ந்த கெரங்கி குமாரி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் மட்டுமே தாயையும், சேயையும் காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவானது. ஆனால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் கிராமத்திற்குள் வர முடியாத நிலை இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பாஸ்கர் ராவ் மற்றும் உறவினர்கள், மூங்கில் கம்பு மற்றும் துணிகளை கொண்டு அவசர அவசரமாக ஒரு டோலியை உருவாக்கினர். வலியால் துடித்துக் கொண்டிருந்த கெரங்கி குமாரியை அதில் அமர வைத்து, தோளில் சுமந்தபடி கரடுமுரடான மலைப்பாதை மற்றும் காட்டு வழியாக நடக்க தொடங்கினர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிட்டம்பாடு கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செனகபாடு கிராமம் வரை அவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெரங்கி குமாரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மலைக்கிராமத்திற்கு உடனடியாக சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர். கர்ப்பிணியை டோலியில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.