

மும்பை,
இந்தியா முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்துவந்த காவல்துறை குழுவில் இடம் பெற்றிருந்த கனோரா என்ற காவல்துறை ஆய்வாளரின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- மும்பையில் புறநகர் பகுதியான கிரஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் தியேனஷ்வர் கனோரா, தனது மனைவி திபாலி (வயது 42) மற்றும் 21 வயது மகனுடன் வசித்து வந்தார்.
காவல்துறை அதிகாரி கனோரா நேற்று இரவு 11 மணியளவில் வழக்கம் போல் தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனால், வீடு வெளிப்புறமாக பூட்டி இருந்ததால் தனது மனைவி மற்றும் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து அண்டை வீட்டாரிடம் தனது குடும்பத்தினர் குறித்த விவரத்தை கேட்டுள்ளார். ஒருவேளை தனது மனைவி மற்றும் மகன் ஷாப்பிங் சென்று இருக்கலாம் என கருதி வீட்டிற்கு வெளியே காத்திருந்தார்.
நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு வாசலில் இருந்த குப்பைத்தொட்டியில் வீட்டின் சாவி கிடப்பதை கண்டார். உடனடியாக வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு திபாலி எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே உயிரிழந்த்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனோராவின் 21 வயது மகன் எங்கு சென்றார் என தெரியவில்லை. இது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் கனோரின் மகன் மீது காவல்துறையினர் சந்தேக வலை வீசியுள்ளனர். , திபாலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.