

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று 30 அடி ஆழ தரைமட்ட கிணற்றுக்குள் காட்டு யானை தவறி விழுந்தது. இதனால், அந்த காட்டு யானை பிளிறியபடியே இருந்தது. அந்த கிணறு குறுகலாக இருந்ததால், யானையால் திரும்ப கூட முடியாமல் பரிதவித்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து பார்வையிட்டனர். இரவு நேரம் என்பதால், யானையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு வனத்துறையினர் மீட்பு பணியை தொடங்கினர்.
கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டி யானையை மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டப்பட்டது. கிணற்றுக்குள் யானை இருக்கும் மட்டத்துக்கு குழி தோண்டப்பட்டு பாதை அமைக்கப்பட்டது.
தோண்டப் பட்ட குழியின் வழியாக யானை மேலே ஏறியது. சுமார் 13 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை மீட்கப்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மேலே வந்ததும் அந்த யானை ஆக்ரோஷமாக பொக்லைன் எந்திரத்தை தாக்கியது. பின்னர் அருகில் இருந்த விவசாய நிலத்துக்குள் ஓடிச்சென்றது.
இதையடுத்து வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடினர். கிணற்றுக்குள் விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறையினருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.