

மூணாறு,
மூணாறு அருகே சுற்றித்திரியும் 'படையப்பா' என அழைக்கப்படும் காட்டு யானை, கடந்த சில நாட்களாக குண்டலை மற்றும் செண்டுவாரை எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு குண்டலை எஸ்டேட்டில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த படையப்பா யானை, ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை தாக்கி சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கூச்சலிட்டு யானையை விரட்டினர். அதன்பிறகு, அந்த யானை செண்டுவாரை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்து தொழிலாளர்களின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி செடிகளை சேதப்படுத்தியது. கடந்த சில நாட்களாக வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர்.